நேற்றைய போட்டியில் சேவாகின் தூள் பறக்கும் அதிரடியை யாரும் மறந்து விட மாட்டார்கள் . எந்த பந்து வந்தாலும் எல்லாம் நொறுக்குத்தான். நான்கு ஓட்டங்களும் , ஆறு ஓட்டங்களுக்கும் பறந்து கொண்டு இருந்தது பந்துகள் . பந்து வீச்சாளர் ஒருவரை கூட விட்டு வைக்கவில்லை சேவாக் . எல்லாம் தூள் பறக்கும் அடி .
ஒருநாள் போட்டிகளில் 200 ரன்கள் அடிப்பது என்பது எல்லோருக்கும் முடியாது . ஆனால் அப்படி அடித்தால் அது செவாக்கால் மட்டுமே முடியும் என்று தான் பலரும் எண்ணி இருந்தார்கள் . அதை சேவாக் செய்து காட்டி உள்ளார் .கில்லி என்றால் கில்க்ரிஸ்ட் தான் . அவரின் ஓய்வுக்குப் பின்பு இப்போதைய கில்லி என்றால் சேவாக் தான் . அதில் எவ்வித சந்தேகமும் இல்லை .
இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டி ஒன்றில் 300 ஓட்டங்களையும் ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்களையும் கடந்த ஒரே வீரர் விரேந்தர் சேவாக் மட்டுமே. ஒருநாள் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவரான சச்சினின் (200 ரன்கள் 147 பந்துகள்) சாதனையையும் தகர்த்து வரலாற்றுச் சாதனை படைத்தார் சேவாக். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரட்டைச் சதமடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சேவாக்.
ஒருநாள் போட்டியில் 8,000 ரன்களையும் கடந்து சாதனை படைத்தார். சாதனைகள் இப்படியே சேவாக்குக்கு தொடர்கிறது . சேவாக் இரட்டைச் சதமடித்து ஆட்டமிழந்து வெளியேறியபோது இந்திய வீரர் ரோஹித் சர்மா மட்டுமின்றி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர். ரசிகர்களின் உற்சாக குரலுக்கு மத்தியில் மட்டையை காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு வெளியேறினார்.
2010-ம் ஆண்டு குவாலியரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் அடித்த 200 ரன்களே ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது . இவ்வாண்டு அந்த சாதனையை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சேவாக் முறியடித்து உள்ளார் . டெஸ்ட் போட்டியில் இரண்டு முச்சதங்களை அடித்துள்ளார். 2004-ம் ஆண்டு முல்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 309 ரன்களும், 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்களும் குவித்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதம் விளாசியவர்களில் சேவாக்கும் ஒருவர். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் முச்சதம் விளாசிய ஏனைய வீரர்கள்.
1999-ம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுக வீரராக களம் கண்ட சேவாக், தன்னுடைய 240-வது ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்தார். இதுவரை 240 போட்டிகளில் விளையாடி 8,025 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை 15 சதமும், 37 அரைசதங்களும் அடித்துள்ளார். 8 ஆயிரம் ரன்களை எட்டிய 6-வது இந்திய வீரர் சேவாக். சச்சின், கங்குலி, திராவிட், அசாருதீன், யுவராஜ் சிங் ஆகியோர் 8 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஏனைய வீரர்கள் .
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதமடிப்பேன் என்று ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை என்று சேவாக் கூறியுள்ளார். நானும், கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கியபோது, நாம் கொஞ்சம் பொறுமையாக விளையாடினால், அதன்பிறகு பெரிய அளவிலான ஸ்கோரை எட்ட முடியும் என்று கம்பீரிடம் தெரிவித்தேன். மைதானம் நன்றாக இருந்தது. பவுண்டரி எல்லை 150 அடி தூரத்தில்தான் இருந்தது. பேட்டிங் பவர் பிளே தொடங்கியபிறகே இரட்டைச் சதமடிக்க முடியும் என்று நினைத்தேன். என்னுடைய கேட்ச்சை சமி தவறவிட்டபோது கடவுள் என்னோடு இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். என்னுடைய குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருமே நான் இரட்டைச் சதமடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரியும். இந்த ஆட்டத்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதை செய்தேன் என்றார்.
எல்லோரது வாழ்த்துக்களும் சேவாக்குக்கு வந்து கொண்டு இருக்கும் . கில்லி , அதிரடி மன்னன் சேவாக்குக்கு எனது வாழ்த்துக்களும் . எனது அபிமான கிரிக்கெட் நச்சத்திரங்களில் சேவாக்கும் ஒருவர் .
No comments:
Post a Comment