Friday, July 19, 2013

என்றும் எம்மனதை விட்டு நீங்காதவர் கவிஞர் வாலி


திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சாதிப்பது என்பது எவ்வளவு பெரிய விடயம் . அப்படி ஜொலித்தவர் கவிஞர் வாலி . என்றும் இவரது படைப்புகள் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் . காலத்தால் அழியாத பல பாடல்களை எமக்காக அவர் தந்து விட்டு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கின்றார் . 

கவிஞர் வாலியின் இழப்பு தமிழ்த்திரை உலகுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் மக்களினதும் பேர் இழப்பாகும் . வாலியை போல் ஒருவரும் இல்லை . இனியும் வாலியை போல் வருவதற்க்கு எவரும் இல்லை . அவ்வாறான மகத்தான கவிஞரை நாம் இழந்து விட்டோம் . 

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பல பாடல்களை எழுதி உள்ளார் . அன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல் தத்துவ பாடல்கள் முதல் இன்றைய காலகட்டத்து இளசுகள் முதல் எல்லோருக்கும் பிடித்த பாடலாசிரியர் என்றால் அது வாலியாகத்தான் இருப்பார் . தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். 

வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. 

இவர் எழுதிய பாடல்களில் மனம் விட்டு நீங்காத பாடல்களாக புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே இது போன்ற பாடல்கள் ஏராளம். முன்பே வா என் அன்பே வா என அவரது பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடல்களும் கூட .

பொய்க்கால் குதிரை, சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம் உட்பட சில படங்களில் நடிகராகவும் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார். இப்போதைய இளையர்கள்  எந்த ரக பாடல்களை விரும்புகிறார்களோ அவர்களின் ரசனை அறிந்து பாடல்களை தருவதில் வல்லவர் வாலி . அதனால் தான் எல்லோரும் விரும்பும் , விரும்பப்படும் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்  கவிஞர் வாலி. 

கண்போன போக்கிலே கால் போகலாமா.. கால் போன போக்கிலே மனம் போகலாமா ? என்று பாடல்களை எல்லாம் எமக்கு தந்து விட்டு இவ்வுலகை விட்டு நீங்கி விட்டீர்கள் . எனினும் எம் போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத  இடம் பிடித்து விட்ட நீங்கள் என்றும் எம்முடன் தான் இருப்பீர்கள் . "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.." 

3 comments:

அம்பாளடியாள் said...

எமது கண்ணீர் அஞ்சலிகளும் இங்கே உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

Pavi said...

எல்லோரது இரங்கல்களும்
நன்றி உங்கள் ,வருகைக்கும் கருத்துக்கும் நண்பர்களே

K Siva Karthikeyan said...

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.."