Friday, January 4, 2013

சந்தோசமாகவும் , உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க ...........



எல்லோரும் சந்தோசமான வாழ்க்கை வாழத்தான் ஆசைபடுகின்றனர். வாழ்க்கை என்றால் சந்தோசமும், துக்கமும் இருக்கத்தான் செய்யும். பாதையில் செல்லும் பொது மேடு, பள்ளம் இருப்பது வழமை தானே. அவற்றை கடந்து நாம் செல்வதில்லையா? அதுபோலதான் வாழ்க்கையும் .

எமது மனதை இலேசாகவும், சந்தோசமாகவும் வைத்திருக்க வேண்டும். கோபப்படுவதை குறைக்க வேண்டும். டென்சன் படுவதையும் குறைத்தால் நாம் பல சில துன்ப , துயரங்களில் இருந்து விடுபடலாம். நமது வாழ்வை சந்தோசமாக கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பது எல்லோரினதும் வழமை . ஆனால் அவர்கள் அதற்க்கு என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரியாமல் திணறுகிறார்கள் .

அந்த பணக்காரனைப் போல நானும் வர வேண்டும், வாழ வேண்டும் என நினைத்து கடன் பெற்று , ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்து தானும் வாழ இயலாமல், கடன் தொல்லையால்  தற்கொலை செய்து கொள்கிறார்கள் . நானும் முன்னேற வேண்டும் என்றால் அதற்க்கு கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும். நினைத்தவுடன் பணக்காரனாக வாழ முடியுமா? 

நாம் சந்தோசமாக இருந்தால் மட்டும் போதுமா ? உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் தான் நாம் சந்தோசமாக இருக்க முடியும் . வீட்டு தலைவனுக்கு வருத்தம், நோய் நொடியில் இருக்கிறார் என்றால் அந்த குடும்பம் சந்தோசமாக இருக்குமா? இல்லை . 

நாம் சந்தோசத்துடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க என்ன செய்யலாம் . வாங்க பார்ப்போம் :

யாராக இருந்தாலும் முதலில் போதியளவு தூக்கம் முக்கியம் . தினமும் கடைசி எட்டு மணித்தியாலங்களுக்கு போதிய உறக்கம் அவசியம். உடம்புக்கு ரெஸ்ட் கிடைக்கும் . உடம்பு களைப்பின்றி மறுநாள் வேலைசெய்ய இலேசாக இருக்கும் . என்னதான் வேலை இருந்தாலும் போதிய அளவு உறக்கத்துக்கும் நேரம் ஒதுக்குங்கள் . அப்படி இல்லாமல் இரவு , பகல் பாராது உழைத்தீர்கள் என்றால் கூடிய கெதியில் பல நோய்கள் உங்களுக்கு சொந்தக்காரன் ஆகிவிடும் .

பொழுதுபோக்கு அவசியம். எந்த நேரமும் வேலை, வீடு என்று இல்லாமல் ஏதாவது பார்க் , பீச் என்று எங்கும் கிழமைகளில் ஒருநாள் ஒதுக்குங்கள் . 

சத்தான உணவுகளை உண்டால் தான் உடம்புக்கும் தைரியம் கிடைக்கும் . வேலை செய்வதற்க்கு சக்தி கிடைக்கும் . எனவே சத்தான உணவுகள் காய்கறிகள், இல்லை வகைகள், பழங்கள்  போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 


ஒவ்வொரு நாளும் போதியளவு நீர் அருந்துங்கள் . எட்டு ரம்ளர் நீர் அருந்துங்கள் . அத்தோடு நின்று விடாமல் உடற்பயிற்சி செய்யுங்கள் . தினமும் ஒரு அரை மணி நேரம் போதும் . தவறாது ஒவ்வொரு நாளும் பயிற்சி  செய்யுங்கள். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருங்கள் . தேவையற்ற கொழுப்பை குறையுங்கள் .

நண்பர்களுடன் சிறிது நேரம் அரட்டை அடியுங்கள். உங்கள் இன்ப , துன்ப சுவாரசியங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . புன்னகைத்து மகிழுங்கள் . பொன்னகைகள் போட்டாலும் புன்னகை இருந்தால் தான் பொன் நகைகளும் அழகாகத்தெரியும் . 

பெரியவர்களுடன் அன்பாக, பண்புடன் கதையுங்கள் . அவர்களின் வாழ்க்கைமுறைகள் , சந்தோசங்கள் போன்றவற்றை பற்றி கேட்டு அவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை அறிந்து நீங்களும் அதை கடைபிடிக்கலாம் . இடையிடையே குடும்பமாய் ஒன்றாக இணைந்து வெளியூர் பயணம் செய்யுங்கள் .சந்தோசமாக பொழுதை களியுங்கள். பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசுங்கள். கணவன், மனைவி இடையே ஏற்படும் சில பிரச்சனைகளை இருவரும் மனம் விட்டு பேசுங்கள். சுமூகமான தீர்வு கிடைக்கும் . இப்போதெல்லாம் இருவரும் கலந்து பேசக் கூட நேரம் கிடைப்பதில்லை . அதனால் தான் பல சிறிய பிரச்சனைகள் கூட பெரிய பிரச்சனைக்கு வித்திடுகின்றன . 

எமது மனதை இலேசாக்க யோகாசனம் செய்யலாம் . புத்தகங்கள் படிக்கலாம் . படங்கள் வரையலாம். கைவேலைப்பாடுகள் செய்யலாம். இயற்கையை ரசிக்கலாம். கவிதை எழுதலாம் எமக்கு பிடித்த பாடல்களை கேட்கலாம் . நகைச்சுவை காட்சிகளை ரசிக்கலாம். 

எல்லாம் நம்மிடமே உள்ளது . நாம் இவற்றை கைக்கொண்டால் சந்தோசமாகவும், மகிழ்வுடனும் இருக்கலாம். இந்த உலகில் நாம் சந்தோசமாக வாழ வேண்டும். மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நாம் நமது பாதையை வகுத்து , நமது கடமைகளை சரிவர செய்ய வேண்டும். மற்றவனை துன்புறுத்தி, களவெடுத்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது .

மனம்போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைவதில்லை . அதை நாம் தான் எல்லோரும் அமைக்க வேண்டும் . 

No comments: